Srilanka

யாழ். பல்கலை பகிடிவதை விவகாரம்! யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் அதிரடி நடவடிக்கை

யாழ். பல்கலை பகிடிவதை விவகாரம்! யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் அதிரடி நடவடிக்கை

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இணைய வழி ஊடாக பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் 2 பெண்கள் உள்ளிட்ட 4 சிங்கள மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு கற்றல் நடவடிக்கைகளில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர் என்று யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

இணைய வழியில் மாணவர்கள் பாலியல் ரீதியிலான பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று தென்னிலங்கை ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், மாணவ சிரேஷ்ட ஆலோசகர்கள், பேரவை உறுப்பினர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

 

அண்மையில் நடைபெற்ற பகிடிவதை தொடர்பில் உத்தியோகப்பற்ற முறையில் வெளியாகிய தகவலின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் 10 மணி நேரம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் முகாமைத்துவ வணிக பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு சிங்கள மாணவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

 

அதேவேளை, குறித்த பகிடிவதை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய முதலாம் ஆண்டு சிங்கள மாணவர்கள் இருவர் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் எனவும், இனங்காணப்பட்ட மாணவர்கள் குறித்த விபரங்கள் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

எதிர்காலத்தில் பகிடிவதையில் ஈடுபடுகின்ற மாணவர்களுக்கு வழங்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ள தண்டனைகள் தொடர்பிலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர், பகிடிவதைகளைப் கட்டுப்படுத்துவதற்கு சமூகத்தினதும் ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர்.

 

கொரோனா வைரஸுக்குப் பின்னர் விரிவுரைகள் ஒன்லைனில் நடக்கின்றன. பகிடிவதையும் ஒன்லைனுக்குச் சென்றுள்ளது.

 

இது தனியே மன எழுச்சியால் நடப்பதல்ல. அதற்கு அப்பால் அரசியல் பின்னணியுள்ளவை.ஏற்கனவே பல்கலைக்கழத்தில் நடந்த மோதல் ஒன்றில், அரசியல் பின்னணியை நான் சுட்டிக்காட்டினேன்.

 

பல்கலைக்கழகத்துக்கு வரும் கிராமப்புற மாணவர்கள் அரசியல் கட்சிகளின் செல்வாக்குக்குட்பட்டுள்ளனர்.

 

எவ்வாறாயினும், பகிடிவதையைத் தடுக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது.

 

பீடத்தில் இந்தச் சம்பவம் நடந்தால், பீடாதிபதி எமக்கு அறிவிப்பார். சிரேஷ்ட மாணவ ஆலோசகர், பிரதி சட்ட ஒழுக்காற்று அதிகாரி ஆகியோர் பீடாதிபதியுடன் இணைந்து அந்த விடயம் தொடர்பான ஆரம்ப அறிக்கையை 2 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

 

அதனடிப்படையில் குற்றப்பத்திரிகை வழங்குவோம். அவர்கள் குற்றத்தின் அடிப்படையில் விடுதியிலிருந்தும் வகுப்பிலிருந்தும் நீக்கப்படுவார்கள்.

 

குறிப்பிட்ட நாட்களுக்குள் மாணவர்கள் அதற்கு விளக்கமளிக்க வேண்டும். மாணவர் ஒழுக்காற்று சபை ஒன்றை உருவாக்கியுள்ளோம். அந்தக் குழு, மாணவனின் விளக்கத்தை ஆராய்ந்து, விசாரணை நடத்தி, உரிய தண்டனை வழங்குவார்கள்.

 

சைபர் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சிறப்புப் பட்டங்கள் பெற முடியாது. நான்காம் வருடக் கற்கையில் ஈடுபட முடியாது. சிறப்பு தேர்ச்சிகள் வழங்கப்படாது. ஆகக்குறைந்தது ஒரு வருடம் அனைத்துக் கல்வி நடவடிக்கையில் இருந்தும் நிறுத்தப்படுவார்கள்.

 

பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்கள் மீது ‘இம்சை’யில் ஈடுபடும் சிரேஷ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள்.

 

இதன்போது வணிக முகாமைத்துவ பீட பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை நிமலதாசன் கருத்துத் தெரிவிக்கையில்,

 

நாங்கள் மிக வேகமாக ஆரம்ப கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளோம். அந்த விசாரணையின் அடிப்படையில் 10 மணித்தியால விசாரணையில் சந்தேகத்துக்குரிய வணிக முகாமைத்துவ பீட இரண்டாம் வருடத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு வகுப்புத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவியதற்காக விசாரணையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த முதலாம் வருட மாணவர்கள் சிலரும் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

இந்த இம்சையில் ஈடுபட்டவர்களுக்கு சிறப்புக் கற்கை நெறி வழங்கப்படாது. ஒரு வருட வகுப்புத்தடை விதிக்கப்படும். இணைய குற்றம் தொடர்பில் பொலிஸாரிடமும் முறையிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related Articles

Leave a Reply

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker